"முதல் வீடு சென்னை" - உயிர் காத்த மாநிலத்தை மறக்காத யூதர்
- 2011 தேசிய கணக்கெடுப்பின்படி, 4,429 யூதர்கள் இந்தியாவில் இருந்தனர்
- உடைமைகளை அருங்காட்சியகத்தில் வைக்க தொல்பொருள் துறைக்கு லெவி கோரிக்கை
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனி அதிபர் அடால்ஃப் ஹிட்லர், யூதர்களை வெறுத்ததனால், அவர்களை கூட்டம் கூட்டமாக கொலை செய்தார்.
ஹிட்லரின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க பல யூதர்கள் தங்கள் குடும்பங்களுடன் நாட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறி அவர்களுக்கு தஞ்சம் தர முன் வந்த பல்வேறு உலக நாடுகளில் குடி புகுந்தனர்.
உயிருக்கு பயந்து அவ்வாறு தப்பிய பல யூத குடும்பங்கள் சென்னை (அப்போதைய மெட்ராஸ்) உட்பட பல இந்திய நகரங்களில் குடி புகுந்தன.
2011 தேசிய கணக்கெடுப்பின்படி, 4,429 யூதர்கள் இந்தியாவில் இருந்தனர். அவர்களில் தமிழ்நாட்டில் 2 பேர் இருந்தனர்.
1921ல் மதராஸ் மாகாணம் (Madras Province) முழுவதும் 45 யூதர்கள் இருந்துள்ளனர்.
இந்நிலையில், மதராஸ் மாகாணத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முதல் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த குடும்பத்தை சேர்ந்த டேவிட் லெவி (David Levi) என்பவர் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
2020ல் இந்தியாவிலிருந்து வெளியேறிய டேவிட் லெவி, தனது குடும்ப உடைமைகளான புனித யூத நூல்கள், யூத மத பாத்திரங்கள், அப்போது இருந்த "சினகாக்" (synagogue) என அழைக்கப்படும் யூத வழிபாட்டு தலத்தின் பொருட்கள் உட்பட பலவற்றை அருங்காட்சியகத்தில் வைக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
"சென்னைதான் எனது முதல் வீடு. எங்கள் இனத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை வரும் சந்ததியினர் அறிய வேண்டும். எங்கள் தாயகம் தமிழகம்தான். என் முன்னோர்களின் பாரம்பரியம் என்னுடன் நிற்காமல் சரித்திரத்தில் பதிய வேண்டும். அதற்காக இதை செய்கிறேன்" என்றார் லெவி.
லெவியின் கோரிக்கை பரிசீலக்கப்படுகிறது என தொல்பொருள் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்தார்.
யூதர்கள் பெரும்பாலும் பவழம் மற்றும் வைர விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களது வர்த்தகத்தை குறிக்கும் வகையில் "பவழக்கார தெரு" (Coral Merchant Street) என உருவான தெரு, சென்னையில் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.