கூடங்குளம் அருகே மீனவர்கள் போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
- நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் கடற்கரையையொட்டி 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தான் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும்.
- மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க உயர்மட்ட அதிகாரிகளின் குழு அமைத்து தீர்வு காண வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் கடற்கரையையொட்டி 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தான் குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும், சின்ன முட்டம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகங்களில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணிக்குள் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி விட வேண்டும், நாட்டு படகு மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க உயர்மட்ட அதிகாரிகளின் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
கூடங்குளம் அருகே இடிந்தகரை, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டம் தொடர்பாக நேற்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மீனவர்கள் முறையிட்டு மனு அளித்தனர். தொடர்ந்து இன்று 2-வது நாளாக நெல்லை மாவட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.