நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பால் தொண்டியில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் முடங்கியது
- வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.
- கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நகர் லாஞ்சியடி, சோழியக்குடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.
அப்போது விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் பிடித்து வரும் இறால், நண்டு, கனவாய் போன்ற கடல் உணவுப்பொருட்களை தூத்துக்குடி பகுதியிலிருந்து வந்து கடல் உணவுப்பொருட்களை பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.
நெல்லை, தூத்துக்குடி பகுதியில் வெள்ளத்தினால் அப்பகுதியில் சாலை, மின்சாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டதோடு, மின்சாரம் இல்லாததால் கடல் உணவுப்பொருட்களை குளிர்படுத்தும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்தநிலையில், தற்போது பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் நிலையும் இல்லாததால், மழை விட்டும் இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 4.4 மில்லி மீட்டர் என்ற அளவில் குறைந்த அளவு மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.