தமிழ்நாடு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் ஏலக்காய் குடோன்களில் ஆய்வு நடத்திய காட்சி.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி- செயற்கை நிறமூட்டப்பட்ட ஏலக்காய் குடோன்களுக்கு பூட்டு

Published On 2023-06-08 05:09 GMT   |   Update On 2023-06-08 05:09 GMT
  • ஆய்வில் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் உரிய உரிமம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது
  • ஆய்வு பரிசோதனைக்காக ஏலக்காய் மாதிரிகளையும் எடுத்துச் சென்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் இயங்கி வருகின்றன. தென்னிந்தியாவிலேயே ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் பகுதியாக போடி திகழ்ந்து வருகிறது.

சுமார் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏலக்காய் தொழிலை நம்பி உள்ளனர். போடியை சுற்றியுள்ள கேரள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விளையும் பணப் பயிரான ஏலக்காய்க்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி முக்கியத்துவம் உள்ளது. முதல் தர ஏலக்காய் கிலோ ரூ.1300 வரை விற்பனையாகும் நிலையில் தற்போது இங்கு இயங்கி வரும் ஏலக்காய் தரம் பிரிப்பு மையங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் உரிய உரிமம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. மேலும் சில ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்களில் உரிய முறையில் உரிமம் மற்றும் அனுமதி பெறாமலும் காய்களின் தரத்தை உயர்த்தி காட்டுவதற்காக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.

கண்ணாடி டம்ளரில் போடப்பட்ட ஏலக்காயில் உள்ள செயற்கை நிறமூட்டிகள் கரைந்து நிறம் மாறிக்காட்சி அளித்தது கண்டு அதிர்ச்சி அடைந்த உணவுத்துறை அதிகாரிகள் உடனடியாக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் காய்களின் மாதிரிகளை ஆய்வுக்குகொண்டு சென்றனர்.

சுமார் 3 டன் ஏலக்காய் நிறமூட்டப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட கடைகளிலேயே தனியாக ஒரு அறையில் வைத்து பூட்டி சாவியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் இன்று 2வது நாளாக போடியில் உள்ள பல்வேறு ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம் மற்றும் ஏற்றுமதி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 5 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் போடி அரண்மனை பின்புறம் உள்ள கோட்டை கருப்பசாமி கோவில் அருகில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம், சுப்புராஜ் நகர் 4வது தெருவில் உள்ள தரம் பிரிக்கும் மையம் மற்றும் போடி கஸ்பா அருகில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் மையமாகிய 3 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதல் தர ஏலக்காயில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 1.5 டன் எடையுள்ள ஏலக்காய் மூட்டைகள் கைப்பற்றப்பட்டு அவரவர்கள் தரம் பிரிக்கும்மையத்திலேயே ஒரு அறையில் பூட்டி வைத்து சென்றனர்.

ஆய்வு பரிசோதனைக்காக ஏலக்காய் மாதிரிகளையும் எடுத்துச் சென்றனர். இந்த ஏலக்காய் மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு விரைவில் முடிவுகள் தெரிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன் படுத்தப்பட்டுள்ளதா? என தெரிய வரும். அவ்வாறு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராகவன் தலைமையில் இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு கடைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News