தக்கலை அருகே புதுமண தம்பதிகளுக்கு மண் சட்டியில் விருந்து- சமூக வலைத்தளங்களில் வைரல்
- காதலுக்கு முதலில் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.
- ஒரே சட்டியில் உணவை வைத்து இருவரையும் சாப்பிட வைத்து மகிழ்ந்தனர்.
தக்கலை:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளை புங்கறை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). பி.காம் பட்டதாரியான இவர், ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான பிரியா (24) என்பவரும் கடந்த பத்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலியை கரம்பிடிக்க முறைப்படி விக்னேஷ், பெண் கேட்டு உள்ளார்.
இந்த காதலுக்கு முதலில் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் சமாதானமடைந்த அவர்கள், திருமணத்திற்கு சம்மதித்தனர். தொடர்ந்து விக்னேஷ்-பிரியா திருமணம் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.
விக்னேசின் காதல் திருமணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிய அவரது நண்பர்கள், மணமக்களை செண்டை மேளம் முழங்க குத்தாட்டம் போட்டு அழைத்து சென்று மண் சட்டியில் விருந்து படைத்தனர்.
ஒரே சட்டியில் உணவை வைத்து இருவரையும் சாப்பிட வைத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பெண் வீட்டில் கொடுத்த சீர் வரிசைகளை சுமந்தபடி நண்பனை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.