கைதான மண்ணுளி பாம்பு கும்பலில் மேலும் சிலருக்கு தொடர்பு- வனத்துறை விசாரணையில் தகவல்
- முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
- தனீசின் செல்போனை ஆய்வு செய்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்பேரில் வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் களக்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் ஒரு காரில் சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் வனத்துறையினரிடம் சிக்கியவர்கள் குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கல்குளத்தை சேர்ந்த தனீஸ்(வயது 27), கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சன்னி(59), களக்காடு அருகே கீழக்கருவேலங்குளம் கரையிருப்பை சேர்ந்த முத்துசாமி(43), ஆழ்வார்குறிச்சி தொண்டர் தெருவை சேர்ந்த முருகேசன்(45), கீழப்பத்தை பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ஹரி என்ற ஐயப்பன்(41), கேரளா மாநிலம் எர்ணா குளம் அருகே ஹைகாட்டு காராவை சேர்ந்த அர்சத்(55) என்பதும் தெரியவந்தது.
மேலும் தனீஸ் என்பவர் தன்னிடம் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு இருப்பதாக சன்னி, அர்சத் ஆகியோரை களக்காட்டிற்கு வரவழைத்ததும், அவர் வைத்திருந்த மண்ணுளி பாம்பிற்கு ரூ.10 லட்சம் வரை பேரம் பேசியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தனீஸ், சன்னி, அர்சத், முத்துசாமி, முருகேசன், ஐயப்பன், அர்சத் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மேலும் கீழக்கரு வேலங்குளத்தில் முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 6 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக அந்த கும்பலிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், செல்போன், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதில் தனீசின் லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான மண்ணுளி பாம்புகளின் புகைப்படங்கள் இருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் தனீஷ் மற்றும் அர்சத் ஆகியோருக்கு வெளிமாநில கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனீசின் செல்போனை ஆய்வு செய்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக களக்காடு புதுத்தெருவை சேர்ந்த அந்தோணி முத்து(41) உள்பட சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் மேலும் பல உண்மைகள் வெளி வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.