தமிழ்நாடு

அடிக்கடி தென்படும் சிறுத்தை: மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்ல நேரக் கட்டுப்பாடு

Published On 2024-02-16 05:47 GMT   |   Update On 2024-02-16 05:47 GMT
  • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
  • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

வடவள்ளி:

மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

Tags:    

Similar News