கோவை தொழில் அதிபரை கடத்தி சிறை வைத்து சொத்தை அபகரித்த கும்பல்- 4 பேர் மீது வழக்கு
- மறுநாள் காலையில் அழகர் ராஜாவை அவர்கள் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
- அணிந்து இருந்த 7 பவுன் செயின், 4 பவுன் காப்பு, முக்கால் பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்தனர்.
கோவை:
கோவை காளப்பட்டி அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அழகர் ராஜா (வயது 37). தொழில் அதிபர்.
இவர் பீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக சித்ராவை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி நித்யா (36) என்பவருடன் சேர்ந்து பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அலுவலகம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் அழகர் ராஜா, நித்யாவுக்கு ரூ.25 லட்சம் பணம் கொடுக்க வேண்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறால் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 1 மாதத்துக்கு முன்பு அழகர்ராஜா அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் பெரியநாயக்கன் பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். கார் விளாங்குறிச்சி 80 அடி ரோட்டில் சென்ற போது நித்யாவின் கணவர் குமாராசாமி உள்பட 3 பேர் காரில் வந்தனர்.
அவர்கள் அழகர் ராஜாவின் காரை வழி மறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பேச வேண்டும் எங்களுடன் வாருங்கள் என அழைத்தனர். அவர் மறுக்கவே அந்த கும்பல், தாங்கள் வந்த காரில் அழகர் ராஜாவை கடத்தி சென்றனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அவரை துடியலூர் இடையர்பாளையத்தில் உள்ள சண்முகம் என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் அழகர் ராஜாவை சிறை வைத்து தாக்கி மிரட்டி ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். மேலும் அவர் அணிந்து இருந்த 7 பவுன் செயின், 4 பவுன் காப்பு, முக்கால் பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்தனர்.
பின்னர் ஒரு நாள் முழுவதும் அவரது வீட்டிலேயே சிறை வைத்தனர். மறுநாள் காலையில் அழகர் ராஜாவை அவர்கள் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து அந்த கும்பல் குரும்பபாளையத்தில் உள்ள அழகர் ராஜாவுக்கு சொந்தமான 4 முக்கால் ஏ நிலத்தை மிரட்டி சண்முகம் என்பவரது பெயருக்கு கிரையம் செய்தனர்.
பின்னர் அவர்கள் சொகுசு காரையும் விற்பனை செய்தது போல மிரட்டி கையெழுத்து வாங்கினர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது.
அப்படி கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அழகர் ராஜாவை பீளமேட்டில் இறக்கி விட்டு சென்றனர்.
இது குறித்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தொழில் அதிபரை காரில் கடத்தி சென்று சிறை வைத்து மிரட்டி நகை, சொத்து மற்றும் சொகுசு காரை அபகரித்த குமாரசாமி உள்பட 4 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.