கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு கிலோ ரூ.400 ஆக உயர்வு
- பிப்ரவரி மாதம் வரத்து குறைவால் பூண்டு விலை ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி பூண்டு விற்பனைக்கு வருகிறது. கடந்த 10 நாட்களுக்குள் பூண்டுவின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு ரூ.160 முதல் ரூ.320 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.200 முதல் ரூ.400வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை பயன்படுத்தி விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதனால் பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு பூண்டு வியாபாரிகள் கோரிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் வரத்து குறைவால் பூண்டு விலை ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் பீர்க்கங்காய் கிலோ ரூ.70-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60-க்கும், வெள்ளரிக்காய் கிலோ ரூ.40-க்கும், புடலங்காய் கிலோ ரூ.35-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.25-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.50-க்கும் மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது.