தமிழ்நாடு

நடிகை கவுதமி நிலம் மோசடி வழக்கில் 6 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2023-12-19 04:25 GMT   |   Update On 2023-12-19 04:25 GMT
  • சொத்துகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக 6 பேர் மீது நடிகை கவுதமி போலீசில் புகார் அளித்திருந்தார்.
  • வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் உள்ளிட்ட 6 பேர், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

சென்னை:

திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நிலம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள சொத்து என நடிகை கவுதமிக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

இந்த சொத்துகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக காரைக்குடி சி.அழகப்பன், அவருடைய மனைவி நாச்சாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, உறவினர் பாஸ்கர் மற்றும் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது நடிகை கவுதமி போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், திருவண்ணாமலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் உள்ளிட்ட 6 பேர், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களுக்கு எதிராக அடிப்படை ஆதாரமின்றி புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் புகார்தாரரான கவுதமி தரப்பிலும், போலீசார் தரப்பிலும் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதையடுத்து அழகப்பன் உள்ளிட்ட 6 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News