தமிழ்நாடு

கால்நடை சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை: செம்பி கிடா ரூ.35 ஆயிரத்துக்கு விலை போனது

Published On 2023-11-07 06:53 GMT   |   Update On 2023-11-07 06:53 GMT
  • மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
  • சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் உள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தை தென்மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தையாகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த சந்தை நடைபெறும்.

இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதுதவிர கோழி, மீன், கருவாடு, மாடு உள்ளிட்டவையும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

பக்ரீத், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது வியாபாரிகளின் கூட்டமும், ஆடுகள் வாங்க வருபவர்களின் கூட்டமும் அலைமோதி காணப்படும். வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று கூட்டம் அலைமோதியது. சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அவை சில மணி நேரங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. சிறிய குட்டிகளை விட பெரிய ஆடுகளை அதிக ஆர்வத்துடன் கறிக்கடைக்காரர்கள் வாங்கி சென்றனர்.

தீபாவளி தினத்தன்று பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் கொண்டாடும் நிலையில், தொடர்ந்து அவர்கள் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிட்டும் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள். எனவே இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

சிறிய குட்டி ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. செம்பி கிடா ஒன்று ரூ.35 ஆயிரத்துக்கும், சண்டகிடா ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இதுதவிர செங்கிடா, கன்னி கிடா உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகளின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர் மழையின் காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தையில் சேறும்- சகதியுமாக காணப்பட்டது. ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. தீபாவளியையொட்டி சந்தையில் அமோக விற்பனை நடப்பது வழக்கம். ஆயிரக்கணக்கான வியாபரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் சந்தையில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

Tags:    

Similar News