தமிழ்நாடு

பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் பிரேம்குமார்.

மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியதாக புகார்- அரசு கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம்

Published On 2024-09-03 06:09 GMT   |   Update On 2024-09-03 06:09 GMT
  • மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர்.
  • குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்ட மாணவ-மாணவிகள் என பலர் படித்து வருகிறார்கள்.

இந்த கல்லூரியில் வணிகவியல் துறை தற்காலிக கவுரவ விரிவுரையாளராக பிரேம்குமார் (40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் விசாரணை நடத்தினார். மேலும் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பாரதியார் பல்கலைக்கழத்தில் உள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பாராதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து மாணவர்கள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்ன்ர் கல்லூரி முதல்வரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

மேலும் புகார் அளிக்கப்பட்ட பேராசிரியர் பிரேம்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மாணவ-மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியதும், தரக்குறைவாக பேசியதும் தெரிய வந்தது.

இதையடுத்து பேராசிரியர் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து அவரை உயர் அதிகாரிகள் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News