null
அரசு பஸ்சில் ஆன்லைன் புக்கிங்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அரசு அழைப்பு
- 150 புதிய சொகுசு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
- பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.
சென்னை,
ஆன்லைன் வழியில் பஸ் இருக்கைகள் முன்பதிவு மேற்கொள்வது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நாள்தோறும் சராசரியாக 2.500-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். தொலைதூர மற்றும் புறநகர் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in அல்லது tnstc செயலியை பயன்படுத்துகின்றனர்.
பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 150 புதிய சொகுசு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இணையதள முன்பதிவு திட்டத்தை அதிகளவிலான மக்கள் பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். தங்கள் கருத்துக்களை ptcsoffice2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.