மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
- வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வந்தார்.
அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ் அணி செயலாளர் வி.கே.பி. சங்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டியன் எம்.எல். ஏ., ஓ.பி.எஸ். அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பாளை மனக்கவலம்பிள்ளை நகருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டனர். வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை வைத்து, முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது.
ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் மாநகர் பகுதிக்குள் புகுந்து அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் மிகுந்த சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வீடுகள் தோறும் கணக்கெடுத்து ரூ.25 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை புதிதாக மீண்டும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் எங்கு எங்கு மழை பெய்யும் எவ்வளவு மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையை முறையாக வழங்கி உள்ளது. அரசுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். எடுக்க தவறி விட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் சுமத்துவது தவறு. பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.
வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை கட்டுவதை ஒரு மாதம் அல்லது 2 மாதம் தள்ளி வைக்க வேண்டும்.
சென்னையை விட தென் மாவட்டங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. அதனையும் கணக்கெடுத்து பொருட்களையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி புரியும் வேலையில் மத்திய அரசு நிதி வழங்கும் முன்பே மக்களுக்கு எந்த மாதிரியான நிதி வழங்க வேண்டும் என்பதை திட்டமிட்டு மக்களுக்கு வழங்கினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை முன்னுதாரணமாக எடுத்து அரசு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.