தமிழ்நாடு (Tamil Nadu)

ஆளுநருக்கோ அல்லது ஆளுநர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் கிடையாது- ஆளுநரின் ஆலோசகர் விளக்கம்

Published On 2024-10-18 14:09 GMT   |   Update On 2024-10-18 14:09 GMT
  • டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திராவிடம் குறித்து தொடர்ந்து கடும் விமர்சித்து வரும் சூழலில் தற்போது திராவிடம் என்று வார்த்தை இடம்பெற்ற வரி தற்செயலாக அல்லாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து கவர்னரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் குழுவினர் கவனக்குறைவாக "திராவிட" என்ற சொல்லைக் கொண்ட ஒரு வரியைத் தவறவிட்டனர். இது குறித்து உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது கவர்னர் ஆர்.என்.ரவி மிகுந்த மரியாதை கொண்டவர். நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர கவர்னருக்கோ அல்லது கவர்னர் மாளிகைக்கோ இதில் எந்த தொடர்பும் கிடையாது. "

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News