லண்டன் சென்று காதலனை கரம்பிடித்த பட்டதாரி பெண்- எதிர்பாராத விதமாக விழாவில் அமைச்சர் சேகர்பாபு
- குடும்பத்தினர்கள், நண்பர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- திருமணத்தில் அமைச்சர் நேரடியாக கலந்து கொண்டது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தியை சேர்ந்தவர் ராமநாதன். வேதாரண்யம் மேற்கு பகுதி தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு அருந்ததி என்ற மகள் உள்ளார். பி.ஏ. பட்டதாரி.
இவரும் தஞ்சாவூர் மாவட்டம், பரக்கலக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன்-பரமேஸ்வரி தம்பதியின் மகனான விஜய்யும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். விஜய் படிப்பை முடித்து விட்டு லண்டனில் பணியாற்றி வருகிறார்.
நாளடைவில் இவர்கள் காதலித்து வருவது அவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. இதற்கு குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, விஜய்-அருந்ததிக்கு கடந்த 3-ந்தேதி பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தியில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்ததும் நீண்ட விடுப்பு கிடைக்காத காரணத்தால் மணமகன் விஜய் லண்டன் புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளில் மணமக்கள் வீட்டார் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அருந்ததியோ தான் லண்டன் சென்று தனது காதலனை கரம் பிடிக்க போவதாக வீட்டில் கூறிவிட்டு, அதன்படி, கடந்த 8-ந்தேதி தனியாக சென்னையில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு அவரின் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை லண்டனில் உள்ள முருகன் கோவிலில் மணமக்களுக்கு இந்து முறைப்படி சிவாச்சாரியார் தமிழில் மந்திரங்கள் கூறி திருமணம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர்கள், நண்பர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழா நடந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த முருகன் கோவிலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் குறித்து அறிந்த அவர் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்தில் அமைச்சர் நேரடியாக கலந்து கொண்டது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.