பண்ணைப்புரம் மலையடிவாரத்தில் மக்னா யானை தாக்கியதில் காவலாளி படுகாயம்
- சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது.
- தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 65), இவர் கேரளாவை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவரது தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் தோட்ட வேலையை பார்த்து விட்டு, வீட்டுக்கு செல்வார். அப்போது தேவையான உணவு பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் இரவு தோட்டத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு ராமு தோட்டத்திற்கு செல்வதற்காக, பண்ணைப்புரம் சங்கப்பன்குளம் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது அந்த பகுதியில் இருந்து வந்த ஒற்றை மக்னா யானை ராமுவை பலமாக தாக்கியது. இதில் அவர் பக்கத்தில் உள்ள முள்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்தார். வேலிக்குள் விழுத்து கிடந்ததால், மக்னா யானை அப்படியே விட்டுவிட்டு சென்றது. உயிர் தப்பிய ராமுவை இன்று அக்கம் பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள யானைகள் இடம்பெயர்ந்து தேனி விளை நிலங்களுக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மக்னா யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.