null
இன்று உலக தந்தையர் தினம்- வாழ்த்து தெரிவிப்பதைவிட வாழ்த்து பெறுவோம்
- சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
- கனிவான கண்டிப்பும், மறைமுகமான பாசமும் தந்தையின் அடையாளமாக விளங்குகின்றன.
'அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம். இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்', 'அன்புக்கு அன்னை, அறிவுக்கு தந்தை' எனவும் கவிஞர் கண்ணதாசன் தமது உயரிய வரிகளால் இதனை சுட்டி காட்டி உள்ளார். தாயின் கர்ப்பகாலம் 10 மாதம். ஆனால் தந்தையோ அந்த குழந்தை சொந்தக் காலில் நிற்கும் வரை சுமை தாங்கியாக இருப்பார். 'தான் பட்ட கஷ்டம்', என் பிள்ளையும் படக்கூடாது என்று அனுதினமும் உழைப்பவர் தந்தை. தமது குடும்பம் யாரிடமும் கையேந்தக் கூடாது என்பதற்காக குடும்பத்திற்காக உழைத்து, ஓடாய் தேயும் தந்தையின் தியாகமும், அவர் படும் வேதனைகளும் வெளியே தெரியாது. துன்பத்தின் சாயல் தம்பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தன் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள் பலர் உள்ளார்கள்.
அமெரிக்காவில் 1909-ம் ஆண்டு சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற பெண், அன்னையர் தினம் கொண்டாடுவது போல், தந்தையர் தினமும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார். அவருடைய தாயாரின் மறைவுக்குப் பின், தந்தை வில்லியம் 6 குழந்தைகளை கொண்ட குடும்பத்தை சிரமங்களுக்கு இடையே வளர்த்து ஆளாக்கினார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை லூயிசுக்கு ஏற்படுத்தியது. இதன்படி 1910-ம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1972-ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தந்தையானவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார். அப்பேர்பட்ட தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையார் தினம் ஜூன் 3-வது ஞாயிற்றுக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது.
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இந்த தினத்தின் நோக்கமாகும். அம்மாக்களை போல, அப்பாக்களுக்கு பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது. கனிவான கண்டிப்பும், மறைமுகமான பாசமும் தந்தையின் அடையாளமாக விளங்குகின்றன.
சிறு வயதில், தாய் தந்தையரின் கை விரலைப்பிடித்து தத்தித் தத்தி நடக்க பழகும் குழந்தைகள், தங்களது பெற்றோரின் முதுமை காலத்தில், அவர்களின் நடை தளரும்போது, கையை பிடித்து நடக்க உதவுவதுதான், தாய் தந்தைக்கு திரும்ப செலுத்தும் மரியாதையாகும். அதற்கான உறுதியை இன்றைய தந்தையர் தினத்தில் அனைவரும் ஏற்க வேண்டும். ஒவ்வொரு வரும் தங்களது தந்தைக்கு இன்று வாழ்த்து தெரிவிப்பதைவிட, அவரிடம் வாழ்த்து பெறுவோம்.