தமிழ்நாடு (Tamil Nadu)

போடி விசுவாசபுரம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிரை காட்டிய விவசாயி.

போடியில் கனமழை: வீடுகள், பயிர்களை சூழ்ந்த நீரால் மக்கள் அவதி

Published On 2023-11-24 05:27 GMT   |   Update On 2023-11-24 05:27 GMT
  • வயல்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
  • மேலசொக்கநாதபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக முக்கிய அணைகள், கண்மாய்கள், குளங்கள் நிரம்பியது. இதனால் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகளில் தண்ணீர் அதிக அளவு சென்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். போடி விசுவாசபுரம் பகுதியில் தென்னை, வாழை, செவ்வந்திப்பூ உள்ளிட்ட விவசாயம் அதிக அளவு நடைபெற்று வருகிறது. இந்த வயல்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

பயிர்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி விட்டதால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் மேலசொக்கநாதபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதுபோன்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால் மாணவ-மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் பெரியகுளம் அருகே நெல் வயலுக்குள் தண்ணீர் புகுந்ததில் 20 ஏக்கர் மதிப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கீழவடகரை பகுதியில் உள்ள ஆண்டிக்குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்களை சூழ்ந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல் தேனி முல்லை நகர் காலனியிலும் தண்ணீர் அதிக அளவு குடியிருப்புகளை தேங்கியதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர். 

Tags:    

Similar News