தமிழ்நாடு

குஞ்சு பொரிக்க ஒரு கல்நண்டு அந்தமானுக்கு விமானத்தில் பறக்கிறது

Published On 2024-10-20 01:52 GMT   |   Update On 2024-10-20 01:52 GMT
  • நண்டின் பின்பகுதியில் சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது.
  • மீனவர்கள் அந்த கல் நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் விட்டனர்.

நாகப்பட்டினம்:

கடல் நீர் மற்றும் நன்னீரில் வாழும் உயிரினம் நண்டு. நண்டுகள் ஒரே நேரத்தில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். கடல் உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் நண்டு நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு உதவி செய்கிறது. குறைவான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நண்டு ஒரு நல்ல உணவாக உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் நேற்று மீனவர்கள் வலையில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல் நண்டு சிக்கியது.

மீனவர்கள் அந்த கல்நண்டுடன் கரைக்கு வந்தனர். அந்த நண்டை அவர்கள் சோதனை செய்தனர். நண்டின் பின்பகுதியில் சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது.

உடனே மீனவர்கள் அந்த கல் நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் விட்டனர். தொடர்ந்து இந்த கல் நண்டு குஞ்சு பொரிப்பதற்காக அந்தமான் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு விமானத்தில் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து ஒரு வாரத்தில் குஞ்சுகள் பொரித்தவுடன் நண்டு குஞ்சுகள் பத்திரமாக கடலில் விடப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

குஞ்சு பொரிப்பதற்காக நண்டு ஒன்று அந்தமானுக்கு விமானத்தில் பறக்க இருப்பது மீனவர்களிடம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News