தமிழ்நாடு

சென்னை தூர்தர்ஷன் விழாவில் 'திராவிடம்' விடுபட்ட விவகாரம்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய 4 பெண்களிடம் விசாரணை

Published On 2024-10-19 09:49 GMT   |   Update On 2024-10-19 09:49 GMT
  • தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஏற்படுத்திய சர்ச்சையால் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை தூர்தர்ஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
  • நேற்று கவர்னர் விழாவில் அந்த மூத்த பெண் பாடகி தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு அழைக்கப்படவில்லை.

சென்னை:

சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள்.

"நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்ட மிதில்............." இவ்வாறு முதல் இரண்டு வரிகளை பாடிய அந்த 4 பெண்களும் 3-வது வரியான,

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்- என்ற வரியை படிக்க தொடங்கும் போது சற்று திணறலுக்குள்ளனார்கள். 3 வினாடிகள் திணறிய அந்த பெண்கள் அந்த வரியை தவிர்த்து விட்டு அடுத்து 4-வது வரியான,

"தக்கசிறு பிறைநுதுலும் தரித்தநறுந் திலகமுமே...." -என்று அடுத்த வரிக்கு தாவி சென்று விட்டனர்.

இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் சட்டத்தை மீறிய கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கினார்.

இதையடுத்து கவர்னர் ஒரு விளக்கம் வெளியிட்டார். அதில் அவர் முதலமைச்சரின் கருத்து இனவாதமானது. அவரது கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதோடு தமிழ் மொழிக்கு செய்து வரும் சேவைகளை பட்டியலிட்டு இருந்தார்.

கவர்னரின் அந்த விளக்கத்துக்கு முதலமைச்சர் நேற்று இரவு 11 மணிக்கு உடனடியாக சுட... சுட... பதிலடி கொடுத்தார். அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்த் தாய் வாழ்த்தை பக்தி சிரத்தையுடன் பாடுவேன் என்று விளக்கம் அளித்துள்ள கவர்னர் முழுமையாக பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே ஏன் கண்டிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் பிளவுவாத சக்திகளிடம் இருந்து விலகி அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி கடமையாற்றுங்கள் என்றும் கூறி இருந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஏற்படுத்திய சர்ச்சையால் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை தூர்தர்ஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "கவனகுறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. இந்த விஷயத்தில் கவர்னருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து கவர்னர் தரப்பிலும், முதலமைச்சர் தரப்பிலும் சற்று அமைதி ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த சலசலப்புக்கு வித்திட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய 4 பெண்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கவர்னர் மாளிகை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. சென்னை தூர்தர்ஷனில் விழாக்கள் நடைபெறும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசை நாடக பிரிவில் உள்ள மூத்த பெண் ஊழியர் ஒருவர்தான் வழக்கமாக பாடுவது உண்டு.

ஆனால் நேற்று கவர்னர் விழாவில் அந்த மூத்த பெண் பாடகி தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு அழைக்கப்படவில்லை. அதற்கு பதில் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவுகளில் உள்ள 4 பெண் ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியதாக தெரிய வந்துள்ளது.

அவர்களில் 2 பேர் தமிழ்த்தாய் வாழ்த்தின் 3-வது வரியை பாடாமல் விட்டுவிட்டதுதான் இவ்வளவு குழப்பத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த 2 பெண்களும் 3-வது வரியை பாடாததால் மற்ற 2 பெண்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த வரியை நழுவ விட்டதாக தூர்தர்ஷன் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தின் 3-வது வரியை அந்த பெண்கள் எப்படி பாடாமல் விட்டார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. இதற்கு விடை காண இன்று தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த 4 பெண்களிடமும் தூர்தர்ஷன் மூத்த அதிகாரி கள் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அதில் எத்தகைய விடை கிடைத்தது என்ற விவரத்தை தூர்தர்ஷன் அதிகாரிகள் வெளியிடவில்லை.

திராவிடம் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் ஏற்பட்ட திணறலா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News