தமிழ்நாடு (Tamil Nadu)

சேலம், நாமக்கல் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை

Published On 2024-10-05 04:02 GMT   |   Update On 2024-10-05 04:02 GMT
  • ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.
  • மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் போல பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருந்தது. குறிப்பாக வழக்கத்தை விட சுட்டெரிக்கும் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் அவதிப்பட்டனர். இந்த நிலையில் திடீரென மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் திடீரென மழை கொட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை கொட்டியது.

சேலம் அம்மாபேட்டை, உடையாப்பட்டி பகுதியில் சுமார் 30 நிமிடம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக செந்நிறத்தில் ஓடியது. இதே போல் வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, கரியகோவில், மேட்டூர், சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதுமே பலத்த மழை கொட்டியது.

ஏற்காட்டில் நேற்று மாலை 3.50 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 20 நிமிடம் கொட்டியது. பின்னர் லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மீண்டும் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை ஒரு மணிநேரம் கனமழையாக நீடித்தது. தொடர்ந்து விடிய, விடிய, மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.

தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் கடுமையான குளிர்நிலவி வருகிறது. இதே போல் பனிமூட்டமும் அதிகளவில் ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-6, ஏற்காடு-29, வாழப்பாடி-4.5, ஆனைமடுவு-29, ஆத்தூர்-41, கெங்கவல்லி-63, தம்மம்பட்டி-2, ஏத்தாப்பூர்-20, கரிய கோவில்-70, வீரகனூர்-40, நத்தகரை-28, சங்ககிரி-5.1, எடப்பாடி-2, மேட்டூர்-6.8, ஓமலூர்-3.5, டேனிஷ்பேட்டை-45.

இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கொல்லிமலை, சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி ,கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலர்மலை, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்திவேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து கடும் இடி மின்னலுடன் கூடிய கனமழை சற்று வேகமாக விடிய விடிய பெய்தது . இதன் காரணமாக இரவு முழுவதும் குளிர்ந்த காற்று நிலவியது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சேந்தமங்கலம் - 97, கொல்லிமலை - 84, நாமக்கல் - 88, திருச்செங்கோடு - 74, பரமத்திவேலூர் - 65.50, எருமப்பட்டி - 40, கலெக்டர் வளாகம் - 34, மோகனூர்- 31, மங்களபுரம் - 20, குமாரபாளையம் - 1.20, புதுச்சத்திரம் 17, ராசிபுரம் - 10.

Tags:    

Similar News