நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கனமழை
- நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது.
- ஓட்டப்பிடாரத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் ஓரளவு வெயில் அடித்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டங்கள் முழுவதும் கனமழை பெய்ய ஆரம்பித்தது.
நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது.
சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. புறநகர் பகுதியை பொருத்தவரை கண்ணடியன் கால்வாய் பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 6.5 சென்டிமீட்டர் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அம்பாசமுத்திரம், களக்காடு சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
அணைகளை பொருத்த வரை சேர்வலாறு, பாபநாசம் அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. களக்காட்டில் 44 மில்லி மீட்டர் மழை பெய்தது.
அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அங்கு அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. நாங்குநேரியில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்த வண்ணம் இருந்தது.
மாநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளை மனக்காவலம் பிள்ளை ஆஸ்பத்திரியில் முட்டு அளவிற்கு மழை நீர் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பாளையில் 4 மில்லி மீட்டர் மலை பதிவாகியது. மாநகரில் இடி-மின்னல் காரணமாக சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.
நெல்லை வண்ணார்பேட்டை பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட தெற்கு புறவழிச்சாலையில் இன்சுலேட்டர் சேதமடைந்தது. அதை மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்று பகலில் வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலை, நெல்லை சந்திப்பு பகுதிகளில் மின் விநியோகம் இல்லை. மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை ஆய்க்குடி, தென்காசி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பரவலாக பெய்தது. ராமநதி அணை பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பெய்தது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் அடித்தது. கருப்பாநதி, குண்டாரில் 2 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணையில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 20 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 17 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.