தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கலா? வேலூர் ஜெயிலில் போலீசார் மோப்ப நாய்களுடன் அதிரடி சோதனை
- கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயிலுக்குள் கைதிகள் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளியே இருந்து ஜெயிலுக்குள் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 56 போலீசாரும், சிறை வார்டன் உள்ளிட்ட 65 சிறை காவலர்கள் சேர்ந்து வேலூர் ஜெயிலில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.
ஆண்கள் ஜெயிலில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது 2 மோப்ப நாய்கள் உதவியுடன் கைதிகளின் அறை, கழிவறை பகுதிகள், சமையலறை என வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். 2 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
இதேபோல போலீசார் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தினர்.
2 ஜெயில்களிலும் நடந்த இந்த அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.