சசிகலாவை விரைவில் சந்திப்பேன்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
- தமிழகத்தில் சாதாரண மனிதன் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
- சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் ராமேசுவரத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தததால் தான் எனக்கு மக்கள் அதிக வாக்களித்தனர். எனவே பிரதமருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டு 52 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் வெற்றி பெற்று ஆட்சி செய்துள்ளது. ஆனால் தற்போது அனைவரும் பிரிந்து இருப்பதால் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என சசிகலா தொடங்கிய பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரிந்து கிடக்கும் சக்திகளை இணைப்பதற்காக சசிகலாவை விரைவில் சந்திப்பேன்.
தமிழகத்தில் சாதாரண மனிதன் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது. எனவே அரசு கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.