தமிழ்நாடு

உடைக்கப்பட்ட சிலையையும், சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்துவதையும் காணலாம்.

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் சுடலை ஆண்டவர் கோவிலில் சிலை உடைப்பு: போலீசார் விசாரணை

Published On 2023-09-14 08:08 GMT   |   Update On 2023-09-14 08:08 GMT
  • நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது.
  • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிலையை உடைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பேச்சி, பிரம்மசக்தி, ஒத்தப்பனை சுடலை ஆண்டவர், முண்ட மாடசாமி,கொம்பு மாடசாமி, பரனடி மாடசாமி, எல்லைக்காவல் சுடலை ஆண்டவர், பிணம்திண்ணி கருநாக முண்டமாடசாமி இரட்டைத்தலை கொம்பு மாடசாமி, இசக்கியம்மன் சடைஅழகன் மாயாண்டி சுவாமிகள் உள்ளன.

இந்தக் கோவிலின் நிர்வாகியாகவும், சாமியாடியாகவும் பாளையங்கோட்டை திருமாள்நகர் குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 57)என்பவர் இருந்து வருகிறார். இவர் தினமும் கோவிலுக்கு வந்து பூஜை நடத்தி செல்வது வழக்கம். நேற்று இரவில் பூஜை முடித்துவிட்டு ஊருக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து அவர் பார்த்தபோது அந்த கோவிலில் உள்ள சடையழகன் மாயாண்டி சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெபஸ்டியான், பேச்சிமுத்து, காளிராஜ் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிலையை உடைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே சிலை உடைக்கப்பட்ட தகவலறிந்து இந்து மக்கள் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News