பின்னணி பாடகி பவதாரிணி மறைவு: தலைவர்கள் இரங்கல்
- பவதாரிணி இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்- தமிழிசை
- தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்- உதயநிதி
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.
தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். #Bhavadharani
என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் செய்தில் கூறியிருப்பதாவது:-
இசைஞானி இளையராஜாவின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரிணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்.
அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
பவதாரிணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் - நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் கூறியிரப்பதாவது:-
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் பவதாரிணி. வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள பவதாரிணி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பவதாரிணியை இழந்து வாடும் அவரது தந்தை இளையராஜா, அவரது கணவர், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் புதல்வியுமான பவதாரிணி, உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரிணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரிணி இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்தபோது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது.
பவதாரிணியை பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்.
ஓம் சாந்தி!
இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இசைக் கலைஞர் பவதாரிணி மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.