தஞ்சை பெரிய கோவில் கருவறை முன்பு வெண்கல குரலில் சிவபுராணம் பாடி அசத்திய குழந்தைகள்
- பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
- கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சிறுமி ருக்மணி (வயது 12), அவரது 6 வயது சகோதரர் தேவசேனாபதி ஆகிய இருவரும் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து பின்னர் பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு பெருவுடையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.
பின்னர் பக்தர்களை கடந்து கருவறை முன்பு நின்று கொண்டு மனம் உருகி நமச்சிவாய வாழ்க.. நாதந்தாழ் வாழ்க... என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை வெண்கல குரலில் சரியான ஏற்ற இறக்கத்துடன் ஒரு சேர தூய தமிழில் பாடினர். இதனை பெருவுடையார் தரிசனத்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறு வயதில் பக்தியுடன் இப்படி ஒரு பாடலா என மெய்மறந்து ரசித்ததோடு குழந்தைகள் இருவரையும் மனதார பாராட்டினர்.
குழந்தைகளின் இந்த பக்தி செயல் ஆன்மீக அன்பர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.