குமாரபாளையத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதி சோகத்தில் மூழ்கிய கிராமம்
- பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
- கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி நாராயணன் (வயது 68)-ராஜேஸ்வரி(67). இவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.
இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லாததால் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்தனர். பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நாராயணன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தார். அவரை ராஜேஸ்வரி கவனித்து வந்தார். நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாராயணன் பரிதாபமாக இறந்தார். இந்த துக்கம் தாளாமல் கதறி அழுத ராஜேஸ்வரியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குமாரபாளையத்தில் கண் கலங்க வைத்துள்ளது. நீயின்றி நானில்லை என சாவிலும் இணைபிரியாத தம்பதியை நினைத்து அப்பகுதி மக்கள் கண்கலங்கினர்.
வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வந்த நிலையில் கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி இறப்பிலும், இணைபிரியாமல் இறந்துள்ளனர் என்று கூறி ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணவர் இறந்த நிலையில் மனைவியும் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.