லக்காபுரத்தில் மழைநீர் புகுந்து வீட்டிற்குள் தவித்த முதியவரை அதிகாரிகள் கால்வாய்வெட்டி மீட்டனர்
- செய்வதறியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே பொன்னுசாமி முடங்கி கிடந்தார்.
- சுமார் 10 அடி ஆழமுடைய ஒரு கசிவுநீர் கால்வாய் மாயமானது தெரியவந்தது.
மொடக்குறிச்சி:
ஈரோடு அருகே லக்காபுரத்தில் வசித்து வருபவர் பொன்னுசாமி (85). முன்னாள் கிராமநிர்வாக அலுவலர். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பொன்னுசாமி எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளார்.
இந்நிலையில் ஈரோடு பகுதியில் பெய்த மழையின் மழைநீரும், கீழ்பவானி பாசன பகுதிகளில் இருந்து வெளியேறிய கசிவுநீரும் லக்காபுரத்தில் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டிற்குள் புகுந்து சூழ்ந்தது. இதனால் செய்வதறியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே பொன்னுசாமி முடங்கி கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் தாசில்தார் இளஞ்செழியன் ஆகியோர் அங்கு சென்று பொன்னுசாமியை அங்கிருந்து மீட்டு மொடக்குறிச்சி டாக்டர்.சரஸ்வதி எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவ மனையில் தற்காலிகமாக தங்கவைத்தனர்.
பின்னர் பொன்னுசாமி வசித்து வரும் வீட்டின் பகுதிக்கான வரைபடத்தை ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் சுமார் 10 அடி ஆழமுடைய ஒரு கசிவுநீர் கால்வாய் மாயமானது தெரியவந்தது.
இதனையடுத்து எந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள் அந்த பகுதியில் ஆக்கிரமித்து மறைக்கப்பட்டிருந்த கசிவு நீர்கால்வாயை கண்டுபிடித்து அதற்குள் நிரப்பட்டிருந்த மண் மற்றும் கான்கிரீட் கட்டுமானங்களை அகற்றி பல ஆண்டுகளாக காணாமல் போன அந்த கால்வாயை மீட்டனர். இதனால் பொன்னு சாமியின் வீட்டையும், அந்த பகுதியையும் சூழ்ந்திருந்த மழைநீர் மற்றும் பாசன கசிவுநீர் வடிந்தது.