6 ஆண்டுகள் ஆகியும் முழுமை அடையாத பாதாள சாக்கடை பணி- சாலையோர பள்ளங்களால் பொதுமக்கள் கடும் அவதி
- நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி 41 கிலோமீட்டர் தூரம் மட்டும் நடைபெற்று வருகிறது.
- தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாகவும் மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி நக ராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். மொத்தம் 69 கிலோமீட்டரில் 237 தெருக்கள் உள்ளன.
இந்நிலையில் பொன்னேரி நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.பின்னர் இடம் தேர்வு செய்வதில் குளறுபடி, நிதி ஒதுக்குவதில் காலதாமதம் காரணமாக பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 2018 -ம் ஆண்டு பாதாள சாக்கடைதிட்டப்பணி தொடங்கப்பட்டது. இதனை இரண்டு வருடத்திற்குள் முடிக்க திட்டமிட்டு ரூ.54.78 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால் பணி தொடங்கி 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாதாளசாக்கடை கால்வாய் அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை. நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி 41 கிலோமீட்டர் தூரம் மட்டும் நடைபெற்று வருகிறது.
வேண்பாக்கம், பழைய பஸ் நிலையம், கள்ளுக்கடை மேடு ஆகிய 3 இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டி, மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பொன்னேரி அடுத்த பெரிய காவனம் ஆரணி ஆற்றின் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. என்.ஜி.ஓ. நகரில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இங்குள்ள தெருக்களில் குழாய் பதிக்க ஆரம்பிக் கப்பட்ட பணிகள் ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றன. இதனால் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாகவும் மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
ஏற்கனவே பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர். ஆனாலும் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணி ஆமைவேகத்தில் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத் கூறும்போது, பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளது. பருவ மழைக்கு முன்பு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமி டப்பட்டு உள்ளது. நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பைப்லைன் புதைத்த பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் போடப் பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மீதமுள்ள பணிகளை முடித்து தரும்போது வீடுகளுக்கு கழிவு நீர் குழாய் இணைப்பு பணி தொடங்கப்படும் என்றார்.