கொரோனாவால் இறந்த தாய்க்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய பிள்ளைகள்
- தாய்க்கு ‘அன்னை சுப்புலட்சுமி’ என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர்.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரை சேர்ந்தவர் கல்யாண குமார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே 14-ந் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில் சுப்புலெட்சுமியின் மகள் ஜெய்சங்கரி (வயது 32), மகன் ராகவேந்திரா (29) ஆகியோர் உயிரிழந்த தனது தாய்க்கு 'அன்னை சுப்புலட்சுமி' என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர். இதனையடுத்து நேற்று காலை இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை மகாகணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோம், சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.