கொடைக்கானலில் தொடரும் சம்பவம்: காட்டுத்தீயில் சிக்கி மின் வயர்கள் எரிந்து நாசம்
- மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
- பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதி, தனியார் வருவாய் நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து சருகுகளாக காணப்படுகிறது.
வெப்பத்தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு அரிய வகை மரங்கள் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன. பழனி சாலையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து குறிஞ்சி நகர் பகுதியில் காட்டுத்தீ பற்றியது. மேலும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. வனப்பகுதி வழியாக சென்ற மின் வயரில் காட்டுத்தீ பற்றி சேதமடைந்தன. இதனால் கிளாவரை, பூண்டி, போளூர் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.
காட்டுத்தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மின் வயர்களை சீரமைக்க முடியாமல் மின் ஊழியர்கள் தவித்தனர். ஓரளவு காட்டுத்தீயின் வேகம் குறைந்த பின்னர் போராடி மின் வயர்களை சீரமைத்தனர். இதனால் மலை கிராமங்களில் பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
கொடைக்கானலில் இந்த ஆண்டு அதிக அளவு காட்டுத்தீ பற்றி வருகிறது. வனப்பகுதி மட்டுமல்லாது குடியிருப்பு பகுதியிலும் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுத்தீயை கட்டுபடுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைப்பது, நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என வன ஆர்வர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் கொடைக்கானல் வனப்பகுதி பசுமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காட்டுத்தீ ஏற்படும் இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மின் வயர்களை காட்டுத்தீயில் இருந்து பாதுகாக்க உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.