தமிழ்நாடு (Tamil Nadu)

பள்ளி மாணவர்களை குறிவைத்து உதவித்தொகை மோசடிகள் அதிகரிப்பு- நெல்லை சைபர் கிரைம் போலீசில் 5 பேர் புகார்

Published On 2024-10-18 06:49 GMT   |   Update On 2024-10-18 06:49 GMT
  • மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார்.
  • ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

நெல்லை:

பங்குச்சந்தை மோசடி, பணம் இரட்டிப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு வகையிலான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களை குறிவைத்தும் இணையதள மோசடிகள் அரங்கேற்றம் தொடங்கி உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து அவர்களது ஆசைகளை தூண்டி பணம் பறிக்கும் நூதன மோசடிகளில் கும்பல்கள் களம் இறங்கி உள்ளன.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகவும், அதற்கான தகவல்களில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் சரியாக இருக்கிறது. ஆனால் ஜிபே போன் நம்பர் தவறாக இருப்பதாக கூறி மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களிடம் ஜிபே எண்ணை பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர் அந்த நம்பருக்கு ஒரு ரகசிய எண் குறுந்தகவலாக வரும். அதனை சொல்லுங்கள் என்று கூறி கேட்டு வாங்கி அந்த வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முழுவதும் பறித்துவிடுகின்றனர். இந்த வகை மோசடிகளில் தமிழகத்தில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பணத்தை ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை இழந்துள்ளனர்.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து போனில் அந்த மோசடி கும்பல் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் அந்த கும்பல் போன் செய்து ஆதார், வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை வாங்கி கொண்டு பணத்தை பறித்து வருகிறது.

இதில் சமீபத்தில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவியின் தந்தைக்கு மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். அவர்கள் தங்களது மகளுக்கு மத்திய அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். அதில் வங்கி கணக்கு எண் தவறாக உள்ளது என கூறியுள்ளார். அதே நேரத்தில் அந்த மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை அவரது ஆதார் கார்ட்டில் இருப்பது போலவே அந்த நபர் தெளிவாக கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி அந்த மாணவியின் தந்தை தொடர்ந்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் மர்ம நபர் ஜிபே நம்பரை கேட்கவும், அவர் உஷாராகிவிட்டார். இதுகுறித்து நான் ஒருமுறை பள்ளிக்கு சென்று நேரில் விளக்கம் கேட்டுக்கொண்டு அதன் பின்னர் எனது நம்பரை தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்த உடன் மர்மநபர் போனை வைத்து விட்டார். அதன்பின்னர் அவரை அந்த நபர் தொடர்பு கொள்ளவே இல்லை.

அதன்பின்னர் மாணவியின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வேறு ஒருவர் மூலம் போன் செய்து கேட்கும்போது, அப்படி எந்த உதவித்தொகைக்கும் விண்ணப்பம் இதுவரை பெறப்படவில்லை என்பதும், அது மோசடி செய்வதற்காக வந்த செல்போன் அழைப்பு என்பது தெரியவந்தது.

இதனிடையே மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார். இதனால் ஏராளமான பெற்றோர்கள் உஷாரான நிலையில், நெல்லை மாநகரில் ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என பலர் பணத்தை இழந்துள்ளனர். ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்த மோசடிகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்போது மோசடிகள் குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோரின் செல்போன் எண்களுக்கும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் வாட்ஸ் அப் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

தங்கள் மகனுக்கு பள்ளிக்கல்வித் துறையிலிருந்து உதவி பணம் வழங்க இருக்கிறோம். ஆகவே தங்கள் ஜிபே நம்பர் மற்றும் ஓடிபி-யை சொல்ல வேண்டும் என்று யாராவது தொலைபேசியில் கேட்டால் அந்த நபரிடம் ஏதும் தகவலை பகிர வேண்டாம். பண இழப்பை தவிர்க்கவும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், நெல்லையில் இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பெரிய அளவில் புகார்கள் வரவில்லை என்றாலும், மாநகரில் 5-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை குறிவைத்து அவர்களது ஆசையை தூண்டி மோசடி நடக்கிறது.

இதனை வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் தான் அரங்கேற்றுகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தால் நமக்கு தான் கஷ்டம். அவர்கள் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் சென்று பதுங்கி விடுவார்கள். பணத்தை மீட்பது கடினம். எனவே மக்களாகத்தான் தெளிவாக இருக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News