சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி ஏற்றுமதி அதிகரிப்பு
- ஷ்ரவன் பண்டிகையால் ஜவ்வரிசி ஏற்றுமதி தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகள் காரணமாக ஜவ்வரிசி விற்பனை மேலும் அதிகரிக்கும்.
சேலம்:
சேலம் குரங்குச்சாவடியில் சேகோசர்வ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, ஈரோடு, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது.
மற்ற மாநிலங்களை விட சேலத்தில் கிடைக்கும் ஜவ்வரிசி தரமாக இருப்பதால் வடமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் சேலம் ஜவ்வரிசியை வாங்கி செல்கிறார்கள. இந்த ஜவ்வரிசியை வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் முக்கிய உணவு பொருளாக உண்டு வருவதால் அதிக அளவில் வட மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.
இந்த நிலையில் வடமாநிலங்களில் பெரும்பாலோனோர் கொண்டாடும் முக்கிய பண்டிகையான ஷரவன் பண்டிகை நோன்பு தற்போது தொடங்கி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானோர் தற்போது ஷரவன் பண்டிகை நோன்பு இருந்து வருகிறார்கள்.
இவர்கள் ஜவ்வரிசியை மட்டும் உணவு பொருளாக சாப்பிடுவது வழக்கம். அதனால் ஜவ்வரிசி தேவை அதிகரித்துள்ளதால் தற்போது சேலம் மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை கடந்த மாதம் 5 ஆயிரத்திற்கு விற்ற நிலையில் தற்போது அதன் விலை குறைந்து 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ஸ்டார்ச் ஒரு மூட்டை 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இது குறித்து ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:- வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஷரவன் பண்டிகையால் ஜவ்வரிசி ஏற்றுமதி தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஜவ்வரிசி மூட்டைகள் தற்போது விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் விற்பனையாக வாய்ப்பு உள்ளது.
மேலும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகள் காரணமாக ஜவ்வரிசி விற்பனை மேலும் அதிகரிக்கும். 2 மாதத்திற்குள் 7 முதல் 8 லட்சம் டன் ஜவ்வரிசி மூட்டைகள் விற்பனையாக வாய்ப்புள்ளது. தேவை அதிகரிப்பால் விலையும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.