சென்னிமலை முருகன் கோவிலில் நன்கொடைகள் செலுத்த 'கியூ ஆர் கோடு' வசதி அறிமுகம்
- ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
- கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும்.
சென்னிமலை:
ஆதி பழனி என போற்றப்படும் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலிற்கு ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்தில் தனியாகவும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்க அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு மிக சிரமம் இருந்து வருகிறது.
மேலும் நன்கொடைகள் செலுத்தி அறநிலைய துறை பணியாளர்களிடம் நன்கொடை ரசீது பெருவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக 'கியூ ஆர் கோடு ' வசதியினை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.
இது குறித்து சென்னி மலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்னுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.