தமிழ்நாடு

ராமேஸ்வரம்-காசி ஆன்மிகப் பயணத்துக்கு இந்த வருடம் 300 பேரை தேர்வு செய்ய முடிவு- அமைச்சர் பி.கே.சேகர்பாபு

Published On 2023-10-29 09:12 GMT   |   Update On 2023-10-29 09:12 GMT
  • மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
  • விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.

சென்னை:

அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 200 நபர்கள் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் "ஆன்மிகப் பயணமாக ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு கடந்த ஆண்டு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதைப் போல, பக்தர்கள் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும்" என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 300 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

மேலும் ஆன்மிக பயணம் குறித்த விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News