சென்னை, நெல்லை, ஈரோடு பகுதிகளில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
- விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாளை பெருமாள் புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.160 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பிடிபட்டுள்ளன.
இந்த நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் 4 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடி பணம் பிடிபட்டது.
இந்த நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று பிற்பகலில் தொடங்கிய இந்த சோதனை இரவு முழுவதும் நீடித்தது. இன்று 2-வது நாளாக சோதனை நீடிக்கிறது.
சென்னையில் விருகம்பாக்கம், அடையாறு இந்திராநகர், திருவான்மியூர், அபிராமபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. இதில் விருகம்பாக்கத்தில் மட்டும் சோதனை முடிவடைந்துள்ளது. அங்கு 3 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அடையாறு இந்திரா நகரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்டு வரும் சோதனை 2-வது நாளாக நீடிக்கிறது. திருவான்மியூரில் ராமச்சந்திரன் என்ற தொழில் அதிபரின் வீடு, அபிராமபுரத்தில் ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் தங்கவேலு ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.
கோவையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருபவர் அவினாசி ரவி. இவரது அலுவலகம் அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பில் உள்ளது.
நேற்று இவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையை 7 அதிகாரிகள் தொடங்கினர். இன்று 2-வது நாளாக அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இதேபோல ராம்நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் குமாரின் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையிலும், வந்தவாசி சாலையில் உள்ள நகைக்கடையிலும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேனியில் தங்கி பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்து, பெரியகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி இருந்த அ.ம.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பணம் வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 4 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் அவர்களது அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அவர்கள் வைத்திருந்த செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் எந்த ஒரு ஆவணங்களோ, பணமோ கைப்பற்றப்படவில்லை.
நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் டெண்டர்களை எடுக்கும் அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கு சொந்தமான நாங்கு நேரி அருகே உள்ள விஜய நாராயணத்தில் அவரது பண்ணை வீட்டில் நேற்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் சோதனையை தொடங்கினர்.
தொடர்ந்து பாளை பெருமாள் புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.