தமிழ்நாடு

ஈரோடு பவர் ஹவுஸ் வீதியில் வருமான வரித்துறை சோதனை நடந்த வீட்டை காணலாம்.

ஈரோட்டில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Published On 2024-04-06 08:48 GMT   |   Update On 2024-04-06 08:48 GMT
  • தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோட்டில் பல்வேறு அரசு கட்டுமான திட்டங்களுக்கான டெண்டர்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஈரோடு:

பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு பணி ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஈரோடு-பெருந்துறை சாலை பழையபாளையத்தில் சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர் அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோட்டில் பல்வேறு அரசு கட்டுமான திட்டங்களுக்கான டெண்டர்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பழையபாளையம் கணபதி நகரில் உள்ள ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி வீடு மற்றும் அவரது கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு வரை நடந்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்த தகவலை கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக அவரது அலுவலகம் மற்றும் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் தான் முழு தகவல் தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

Tags:    

Similar News