சென்னை புறநகரில் பயங்கரம்: பெண் என்ஜினீயர் உயிரோடு எரித்துக்கொலை
- உயிரிழந்த பெண்ணின் உடலை ஆய்வு செய்தபோது இரும்பு சங்கிலியால் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.
- காதலில் விழுந்த விரிசலே நந்தினியின் உயிரை பறித்து உள்ளது.
சோழிங்கநல்லூர்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை தாழம்பூரை அடுத்து உள்ளது பொன்மார். இங்கிருந்து மாம்பாக்கம் நோக்கி செல்லும் சாலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.
அப்பகுதியில் உள்ள தனியார் தண்ணீர் கம்பெனிக்கு எதிரே உள்ள காலி இடத்தில் இருந்துதான் பெண்ணின் அபயகுரல் வந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளம்பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தீ வைத்து உயிருடன் எரிக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டனர்.
உடனடியாக பெண்ணின் உடலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
உயிரிழந்த பெண்ணின் உடலை ஆய்வு செய்தபோது இரும்பு சங்கிலியால் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. இதனால் இளம்பெண்ணை யாரோ திட்டமிட்டு கொலை செய்திருப்பது உறுதியானது. இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் செல்போன் ஒன்று சிக்கியது. அடையாள அட்டை ஒன்றும் கிடந்தது.
அதை வைத்து விசாரணை நடத்தியபோதுதான் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் நந்தினி என்பதும் பெருங்குடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
26 வயதாகும் நந்தினியின் சொந்த ஊர் மதுரை தெப்பக்குளம். தந்தை பெயர் ராஜேந்திரன். பெருங்குடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் கடந்த 8 மாதமாக வேலை செய்து வந்த நந்தினி காதல் விவகாரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரிய வந்தது.
துரைப்பாக்கம் கண்ணகி நகரில் தனது சித்தப்பா வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்த நந்தினியை வெற்றிமாறன் என்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நந்தினியின் செல்போன் எண்ணை வைத்து குற்றவாளி யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து நந்தினி கொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே கொலையாளி வெற்றியை தாழம்பூர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வெற்றியும், நந்தினியும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலில் விழுந்த விரிசலே நந்தினியின் உயிரை பறித்து உள்ளது.
மதுரை கீழவாசல் லட்சுமி புரத்தை சேர்ந்த வெற்றியும், நந்தினியும் ஒன்றாக 10-ம் வகுப்பு படித்துள்ளனர். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி காதலை வளர்த்து உள்ளனர்.
இந்த நிலையில்தான் வெற்றியின் உடல் மொழி மற்றும் பேச்சில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கொஞ்சம் கொஞ்சமாக திருநங்கையாக மாறியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி வெற்றியிடமிருந்து விலகிச் சென்று உள்ளார்.
உனக்கும் எனக்கும் சரி வராது. நாம் பிரிந்து விடுவோம் என்று கூறி விட்டு நந்தினி பேசுவதையும் தவிர்த்து உள்ளார். இதன்பிறகு நந்தினி, ராகுல் என்கிற வாலிபருடன் நட்பாக பழகி உள்ளார். இது வெற்றிக்கு தெரியவந்தது. அவர் நந்தினியை கண்டித்து உள்ளார். ஆனால் நந்தினியோ அதனை கண்டு கொள்ளாமல் இருந்து உள்ளார்.
இது வெற்றிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அதனை காட்டிக் கொள்ளாமல், நாம் நண்பர்கள் போல பேசிக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இதனை வெகுளிப்பெண்ணான நந்தினியும் நம்பியுள்ளார்.
இந்த நிலையில் நந்தினிக்கு நேற்று பிறந்தநாள் வந்துள்ளது. காலையிலேயே வெற்றி, நந்தினியை போனில் தொடர்பு கொண்டு நல்லவன்போல வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னோடு பொழுதை கழித்தால் சந்தோஷப்படுவேன். உனக்கு புத்தாடை எடுத்து தருகிறேன் என்றெல்லாம் பேசி நந்தினியிடம் வெற்றி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நந்தினியை நேற்று காலையில் சந்தித்த வெற்றி மோட்டார் சைக்கிளில் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார். புதிய துணி வாங்கி கொடுத்து விட்டு ஆசிரமம் ஒன்றிற்கும் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் மாலை 6 மணி அளவில் தாழம்பூர் பகுதிக்கு நந்தினியை அழைத்துச் சென்ற வெற்றி, இருவரும் உடலில் சங்கிலியை கட்டி விளையாடுவோம் என்று கூறியுள்ளார். முதலில் உன் மீது சங்கிலியை சுற்றி ஒரு போட்டோ எடுப்போம். அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அப்போதும் வெகுளியாகவே இருந்த நந்தினி, தனது உயிர்போகப் போகிறது என்பது தெரியாமல் அதற்கும் தலையாட்டி இருக்கிறார்.
அப்போதுதான் வெற்றி தனது ஆத்திரம், கோபம் அனைத்தையும் நந்தினியின் மீது வெறித்தனமாக காட்டி மிருகமாக மாறி இருக்கிறார். சங்கிலியால் கை, கால்களை கட்டி, காலி இடத்துக்கு தூக்கிச் சென்ற வெற்றி, கழுத்து, கை, கால் உள்ளிட்ட 5 இடங்களில் முதலில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் வலி தாங்க முடியாமல் நந்தினி அலறி துடித்துள்ளார். அப்போதும் ஈவு இரக்கமின்றி தான் வாங்கி வந்திருந்த பெட்ரோலை எடுத்து நந்தினியின் மீது ஊற்றி உயிருடன் தீ வைத்துள்ளார். இதில்தான் அப்பாவி பெண்ணான நந்தினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த கொடூர கொலை சம்பவம் தாழம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலையுண்ட நந்தினியின் உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நந்தினி உயிரிழந்தது பற்றி தெரியவந்ததும் மதுரையில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்கள் நந்தினியின் உடலை பெற்றுச் செல்வதற்காக சென்னைக்கு விரைந்துள்ளனர்.
காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த வெற்றி மீது கடும் நடவடிக்கை எடுத்து வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிக்கு உச்சபட்ச தண்ட னையை வாங்கி கொடுக்க வேண்டும் என்று நந்தினியின் தோழிகளும் அவரது உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.