தமிழ்நாடு

போதைப்பொருள் பண மோசடி வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் கைது

Published On 2024-08-13 13:48 GMT   |   Update On 2024-08-13 13:48 GMT
  • அமலாக்கத்துறை நேற்று மாலை கைது செய்ததாக தெரிவித்துள்ளது.
  • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 27 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் கடத்தல் ஆயிரக்கணக்கான கோடியில் சர்வதேச அளவில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை தற்போது பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை முகமது சலீம் கைது செய்யப்பட்டார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்த 15 நாட்கள் அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தது. ஆனால் முதன்மை செசன்ஸ் நீதிபதி அவரை ஆகஸ்ட் 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அமலாக்கத்துறையின் மனு தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Tags:    

Similar News