மதுரை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வீழ்ச்சி: கிலோ ரூ.300-க்கு விற்பனை
- மல்லிகை பூவும் தங்கம் போல் தினமும் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபரிகளும், பொது மக்களும் கூறுகின்றனர்.
- மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
மதுரை:
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மல்லிகை பூக்கள் அதிகளவில் கிடைப்பதால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
தினமும் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு 20 முதல் 25 டன் வரை மல்லிகை பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்போது மல்லிகை பூக்கள் விலை பெருமளவு சரிந்துள்ளது.
பண்டிகை, திருவிழா மற்றும் முகூர்த்த நேரங்களில் மல்லிகை பூக்கள் விலை உச்சத்தில் இருக்கும். சில நேரம் கிலோ ரூ. 1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையாகும். இதனால் மல்லிகை பூவும் தங்கம் போல் தினமும் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபரிகளும், பொது மக்களும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இன்று மல்லிகைப்பூ விலை மிகவும் வீழ்ச்சியடைந்து மதுரை மார்க்கெட்டில் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பிச்சி, முல்லை பூக்கள் விலையும் குறைந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ.300-க்கும், பட்டர் ரோஸ் கிலோ ரூ. 80-க்கும், சம்பங்கி பூக்கள் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
வழக்கமாக கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனை செய்யப்படும் கனகாம்பரம் மலர்களும் இன்று கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. பூக்களின் வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் விலை சரிவு காரணமாக மலர் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆனால் விலை குறைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் மல்லிகை பூக்கள் உள்பட பல்வேறு பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.