தமிழ்நாடு

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் 'லாபதா லேடீஸ்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Published On 2024-09-24 16:08 GMT   |   Update On 2024-09-24 16:08 GMT
  • ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் லாபட்டா லேடீஸ் படத்தை அனுப்ப முடிவு.
  • இந்தி படம் என்பதற்காகவே லாபட்டா லேடீஸ் படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டு.

ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு நாடு முழுக்க 29 படங்களில் ஒரு படத்தை அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 29 திரைப்படங்களை பார்த்த இந்திய திரைப்பட கூட்டமைப்பு ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு இந்தியா சார்பில் லாபட்டா லேடீஸ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்த பட்டியலில் தமிழில் மகாராஜா, தங்கலான், கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, ஜமா ஆகிய படங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த விஷயத்தில், தமிழ் படங்களை வேண்டுமென்றே புறக்கணித்து, இந்தி படம் என்பதற்காகவே லாபட்டா லேடீஸ் படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "கொட்டுக்காளி, தங்கலான், வாழை, மஹாராஜா உள்ளிட்ட கதையும்-கருத்தும்-தாக்கமும் மிகுந்த தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைப்பதற்காக பட்டியலில் இருந்தும் இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது!"

"இந்தி திரைப்படமான 'லாபதா லேடீஸ்' பல்வேறு கருத்துக்களை நகைச்சுவையோடு சொன்னாலும் உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதே உண்மை! என்ன மொழியில் படம் உள்ளது என்பதை பார்க்காமல் திரை மொழியில் மக்கள் வாழ்வியலுடன் உணர்ந்து பார்த்த படங்களை அங்கீகரிப்பதே ஆஸ்கருக்கு நாம் போடும் அடித்தளம்."

"இந்தியாவில் மட்டும் தான் ஆஸ்கர் விருதிற்கான தேர்வின் விதத்தினால் திரைப்படம் இங்கேயே தோற்று விடுகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News