ஜெயக்குமார் வழக்கில் தி.மு.க. ஒன்றிய செயலாளரிடம் விசாரணை
- ஜெயக்குமார் வழக்கில் போதிய தடயங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
- சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் 2 மாதங்களுக்கு பின்னரும் அவரது மரண வழக்கில் போதிய தடயங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே அவர் இறப்பதற்கு முன் அவரது கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே 2 முறை விசாரித்துவிட்ட நிலையில் தொடர்ந்து பல்வேறு நபர்களிடமும், தொழிலதிபர்களிடமும், அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் தனித்தனியே நேரில் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சியிடம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
அப்போது அவரிடம் ஜெயக்குமாருக்கும், அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? எத்தனை வருடங்கள் பழக்கம்? ஜெயக்குமார் தனது கடிதத்தில் முதல் நபராக குறிப்பிட்டிருக்கும் ஆனந்த ராஜாவுக்கும், ஜெயக்குமாருக்கும் எத்தனை வருட பழக்கங்கள் இருந்து வந்தது? அவர்களுக்கு இடம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவற்றுக்கு உரிய பதில்களை ஜோசப் பெல்சி கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார் அடுத்ததாக விசாரணைக்கு அழைக்கும்போது வந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.