கபினி அணை நீர்மட்டம் 82.91 அடியை எட்டியது
- 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக இருந்தது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
124.80 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3406 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2257 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 82.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6424 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 257 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர்வெளியேற்றப்பட்டு வருகிறது.