குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து யானைகள் தொடர் அட்டகாசம்
- வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.
- கடந்த மாதம் கரிசல்குடியிருப்பு ஊருக்குள் யானை ஒன்று புகுந்தது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீ.ப.தெரு, உ.மு. சந்து, காவல்கார தெரு, சாம்பவர் காலனி ஆகிய பகுதிகளில் 4 யானைகள் புகுந்து சுற்றி வந்தன. தொடர்ந்து அங்கிருந்த தென்னை மரம் ஒன்றை அந்த யானைக்கூட்டம் வேரோடு சாய்த்தது. வேலி கற்களையும் உடைத்து தள்ளியது.
இதை பார்த்ததும் அங்கிருந்த கிராம மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் யானைகளை பொதுமக்கள், விவசாயிகளுடன் சேர்ந்து வெடி வெடித்தும், கூட்டாக சத்தம் எழுப்பியும் வனப்பகுதிக்குள் நேற்று விரட்டினர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் 3 யானைகள் வடகரை மேட்டுக்கால் சாலையில் உச்சாமடை அருகே சேக் உசேன் என்பவருடைய தோப்பில் நிற்பதை கண்டு அலறி அடித்து ஓடி உள்ளார். அதன் பின்னர் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.
ஆனால் இந்த யானைகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து சுற்றி வருவதால் மீண்டும் வரக்கூடும் என இப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம் கரிசல்குடியிருப்பு ஊருக்குள் யானை ஒன்று புகுந்தது. கடந்த வாரம் 2 யானைகள் வடகரை குளத்தில் குளியல் போட்ட வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவியது.
இங்கு அடிக்கடி ஊருக்குள் வரும் யானை களை விரட்ட வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த யானைகளை மீண்டும் மீண்டும் ஊருக்குள் வராத படி சோலார் மின்வேலிகள், அகலிகள் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.