தமிழ்நாடு

கள்ளச்சாராய பலி: அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சிகள்- தமிழச்சி தங்கபாண்டியன்

Published On 2024-06-22 07:21 GMT   |   Update On 2024-06-22 07:22 GMT
  • கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது.
  • உயரதிகாரிகள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதுவரையிலும் கள்ளச் சாராயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 55தாக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தி.முக. எம்.பி தமிழச்சி தங்கபாண்டின் வருத்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

"கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது.

தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் அந்தக் குடும்பங்களை மீட்டெடுக்கட்டும். அதிகாரிகள் மாற்றப்பட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் விஷச்சாராய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரித்துள்ளது. நேற்றைய உயரதிகாரிகள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போலின்றி துணிச்சலுடன் களத்தில் நின்று 'எதிர்காலத்தில் நடக்காது' என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு!" என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News