தமிழ்நாடு

ஆர்.எஸ்.பாரதியை சிறையில் தள்ளாமல் விடமாட்டேன்- அண்ணாமலை

Published On 2024-07-10 08:17 GMT   |   Update On 2024-07-10 08:17 GMT
  • அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை யார் மீதும் வழக்கு எதையும் நான் போடவில்லை.
  • ஆர்.எஸ்.பாரதி மீது கோர்ட்டில் இன்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு படுத்தி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதன்படி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு இன்று நேரில் சென்ற அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜூன் மாதம் 23-ந்தேதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 65 பேர் உயிரிழந்தது தொடர்பாக பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு அண்ணாமலைதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அண்ணாமலை கூட்டு சதி செய்து எங்கோ ஒரு இடத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை கொண்டு வந்து கொடுத்ததாலேயே மக்கள் இறந்துள்ளனர் என்று சொல்லி இருந்தார்.


ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்து எனக்கு பெரிய துக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை யார் மீதும் வழக்கு எதையும் நான் போடவில்லை. என் மீது எத்தனையோ பொய் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் கூறப்பட்டுள்ளன.

ஆனால் நான் யார் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கவில்லை. ஆனால் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லை தாண்டி சென்று விட்டது. 80 வயதை தாண்டிய அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.வின் காலம் முழுமையாக முடிந்து விட்டது என்பதை தெரிந்த பிறகு அவரது வாயில் இருந்து அவதூறு மற்றும் பொய் பேச்சுகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன.

அதனுடைய வெளிப்பாடாகத்தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு நான்தான் காரணம் என்று குற்றம் சுமத்தி உள்ளார்.

இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது கோர்ட்டில் இன்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளோம். இந்த பணத்தை அவரிடமிருந்து பெற்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்காக அங்கேயே ஒரு முகாம் அமைக்க உள்ளோம். அதுவே எங்கள் நோக்கம்.

எனவே இந்த வழக்கை கம்பீரமாக எடுத்து நடத்த முடிவு செய்துள்ளோம். ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.


இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன் அனுப்பப்படும். இந்த வழக்கை கடைசி வரை எடுத்துக் கொண்டு செல்வோம். இத்தனை ஆண்டுகளாக தி.மு.க.வை யாரும் எதிர்காமலேயே இருந்தனர். இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்பப் போகிறோம்.

அவரிடமிருந்து பெறப் போகும் ரூ.1 கோடி பணத்தை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப் போவதாகவும் அபிடவிட் மனுவில் தெரிவித்து உள்ளோம்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.பாரதி என்னைப் பார்த்து சின்னப் பையன் என கூறியிருந்தார். யார்-யாரையெல்லாமோ நான் சிறைக்கு அனுப்பி இருந்தேன். எனது கையில் ஜாதக ரேகை நன்றாக உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். இந்த சின்ன பையன் இந்த வழக்கை வைத்து ஆர்.எஸ்.பாரதியையும், தி.மு.க.வையும் என்ன செய்யப் போகிறேன் என்பதையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.

இந்த சின்ன பையன் ஆர்.எஸ்.பாரதியின் ராசியான கைரேகையை என்ன செய்யப்போகிறார்? என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

ஆர்.எஸ்.பாரதியையும், தி.மு.க.வையும் நாங்கள் விடப் போவது இல்லை. எல்லோரும் ஒதுங்கிப் போவதால்தான் பி.ஏ. படித்தவர்களை அவர் நாய் என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஆணவத்தை தாண்டி அட்டூழியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். டாஸ்மாக் மது விற்பனை பற்றியும் விசாரணை நடத்த வேண்டும். யாரெல்லாம் சாராய ஆலை வைத்துள்ளனர். முறையாக தயாரிக்கப்படுகிறதா? என்பது பற்றியெல்லாம் விசாரணை நடத்த வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சியினரே கேட்கிறார்கள். அது போன்ற ஒரு விசாரணை நடைபெற்றால்தான் உண்மை வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News