சின்னசேலம் அருகே பள்ளி கலவரத்தில் ரூ.3.45 கோடி பொருட்கள் சேதம்
- பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததையொட்டி அவரது பெற்றோர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.
- கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது சேதமான பொருட்கள் குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதையொட்டி அவரது பெற்றோர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.
ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பல சமூக அமைப்புகள் கடந்த மாதம் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
தகவல் அறிந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக தலையிட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தார். எனினும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், தூண்டியதாகவும், இதற்கு காரணமாக இருப்பவர்களையும் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் இதுவரை 358 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து கைது நடவடிக்கை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கலவரத்தின்போது சேதமான பொருட்கள் குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.
தற்போது முதல்கட்ட அறிக்கையை கண்காணிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் கலவரத்தின்போது 3 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 72 ரூபாய் மதிப்பில் பொது சொத்துக்கள் சேதமானதாக வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கணக்கிடும் பணி நடந்து வருகிறது.