தமிழ்நாடு (Tamil Nadu)

எதிர்க்கட்சிகள் ஒரே தளத்தில் இணைவது மாற்றத்தை ஏற்படுத்தும்- கனிமொழி

Published On 2023-06-23 06:29 GMT   |   Update On 2023-06-23 06:29 GMT
  • தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார்.
  • பெண்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அந்த கூற்றுக்கு ஏற்ப இவர் பஸ்சை இயக்கி வருகிறார்.

கோவை:

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பஸ்சில் பயணம் செய்தார்.

பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார்.

பின்னர் கனிமொழி எம்.பி., பீளமேட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆண்களும் பெண்களும் சமம் தான். பெண்கள் லாரி, பஸ் ஓட்டுவார்களா என்று கேட்பார்கள். தற்போது அதனை இந்த பெண் செய்து காட்டியுள்ளார். ஷர்மிளா பஸ்சை இயக்குவது மிகவும் பாராட்டுக்குரியது. இது மகிழ்ச்சியாகவும் உள்ளது.

மேலும் பெண்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அந்த கூற்றுக்கு ஏற்ப இவர் பஸ்சை இயக்கி வருகிறார். இது பெருமைக்குரிய விஷயமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, கனிமொழி எம்.பி.யிடம் பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் பங்கேற்கும் எதிர்கட்சிகளின் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், இன்றைய தினத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரே தளத்தில் ஒன்றிணைவது என்பது இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இது வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை என்றார்.

Tags:    

Similar News